பாலை மலர் - 13, 'சொந்தமில்லை..! பந்தமில்லை..! வாடுது ஒரு பறவை..!'



பெளர்ணமி நிலவாய் ஒளி உமிழும் முகம். கருணைப் பொழியும் விழிகள். மனங்களை ஈர்த்திடும் பார்வை. சிவந்த அதரங்களில் சதா குடிகொண்ட குறுநகை. சுருண்ட கரு கரு முடி. கோதுமை நிறத்துடன் கொழு.. கொழு.. பூப்போன்ற உடல். மேலும், கீழுமாய் கால்களை உதைத்துக் கொண்டு அரவணைக்க துடிப்பதுபோல கரங்களை நீட்டிக் கொண்டு..

இப்படிப்பட்ட குழந்தையை அப்துல்லாஹ் கண்டால்..  பூரித்துப் போவாரே! 

ஆமினா கற்பனையில் மூழ்கினார். 

"அன்பே! ஆமினா! என்ன பெயர் வைத்தாய் என் செல்வத்துக்கு?" - என்று அவர் கேட்பார். 

நான் நாணத்துடன், "அத்தான்! நமது கண்மணிக்கு அஹ்மது! முஹம்மது..! என்று பெயர் வைத்திருக்கின்றேன்!"-என்று சொல்வேன்.

"புகழுக்குரியவர்.. ஆஹா..! என்ன பொருத்தமான பெயர் என் பிள்ளைக்கு!" - என்று அவர் மகிழ்ந்து போவார்.

"அழகான குழந்தைக்கு பொருத்தமான பெயர்!"-அவர் குழந்தையை தூக்கி கொஞ்சுவார். 

கடைகண்ணால் பார்த்துக் கொண்டே, "ஏன் இவ்வளவு நாள் கழித்து திரும்பினீர்கள். உங்களைக் காணாமல் நான் எவ்வளவு தவித்துவிட்டேன் தெரியுமா?"- என்று சிணுங்குவேன்.

"ஏன் தெரியாது? அனுதினமும் நீ பட்ட வேதனையை நானும் அல்லவா அனுபவித்தேன்! வளையல் கழலும் விதமாய் மெலிந்து போன கரமும், பசலைப் படர்ந்த உடலும் உன் நிலைமையை சொல்லாமல் சொல்கின்றன. கண்ணே! ஆமினா! சென்ற பணி முடிந்ததோ இல்லையோ பறந்து வந்துவிட்டேனே.. இனி என்ன கவலை?"-ஆசையுடன் என்னை அணைத்துக் கொள்வார். 

சமாதானம் அடையாத நான், "மக்காவிலிருந்து ஷாம் தேசம் சென்ற எத்தனையோ குழுக்கள் எப்போதோ மக்கா திரும்பி விட்டன. ஆனால், நீங்கள்தான் தாமதமாக திரும்பியுள்ளீர்கள்!" - என பொய் கோபம் காட்டுவேன். 

"அட பைத்தியமே! உண்மையைச் சொன்னால்.. எங்கே வருத்தப்பட போகிறாயோ என்றுதான் சொல்லவில்லை. நான் யத்ரிபில் நோயுற்று உன்னுடைய உறவினர்களான பனுநஜ்ஜார் கோத்திரத்தாருடன் தங்கும் சூழல் ஏற்பட்டது. உடல்நிலை சற்று தேறியதும் இதோ வந்துவிட்டேன் உன்னிடம்!"- என்று சமாதானம் சொல்லுவார். 

பதறிப்போன நான், சொல்வேன்: "நோயுற்ற தங்களுக்கு அருகிலிருந்து பணிவிடை செய்யக்கூட முடியாத துரதிஷ்டசாலியாகிவிட்டேனே! பாவி நான். தாங்கள் நோயுற்றதை அறிந்து எவ்வளவு துடித்துவிட்டேன் தெரியுமா? அத்தான் சிறகிருந்தால் யத்ரிபுக்கு பறந்தல்லவா வந்திருப்பேன்!"

அதன் பின்.. அதன் பின்.. வார்த்தைகள் மறைந்து மௌனம் சூழும் நிகழ்வை நினைத்து ஆமினாவின் முகம் குங்குமப்பூவாய் சிவந்தது.

ஆமினா இப்படி அப்துல்லாஹ்வின் நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த போது, 'யத்ரிபிலிருந்து அப்துல்லாஹ் புறப்பட்டுவிட்டார்! மக்கா திரும்பிக் கொண்டிருக்கிறார்!'- போன்ற செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. 

ஆனால், அப்துல்லாஹ்தான் இன்னும் வந்தபாடில்லை!

- பூக்கும்.

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 8509888770735797

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress