'பாலை மலர் 19: இதயத்தை பறிகொடுத்த ஒரு தாய்!'


மக்காவாசிகள் அஞ்ஞானத்தில் முங்கிய.. மூடநம்பிக்கையில் திளைத்த சமூகமாக வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் மழைக்காக ஒரு கடவுள். காற்றுக்காக ஒரு கடவுள். செல்வத்திற்காக ஒரு கடவுள். நோய் நிவாரணத்திற்காக இன்னொரு கடவுள் என்று பல்வேறு கடவுள்களை கற்பித்து அந்தக் கடவுள்களுக்கு பல்வேறு துறைகளை ஒதுக்கியிருந்தனர்; வழிபட்டும் வந்தனர். உண்மையில், அவற்றில் எந்த ஒன்றுக்கும், எப்பொருளுக்கும் இறைவனாகும் தகுதி இல்லை என்பதை பகுத்தறிந்து பார்க்க மறந்துவிட்டனர்.

பிறருக்கு நன்மையோ, தீமையோ செய்ய முடியாத கற்பனை தெய்வங்கள் எப்படி இறைவனாக இருக்க முடியும்? தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும், ஆபத்துகளையும் கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாதவை ‘சர்வசக்தி’ வாய்ந்தவையாக, முறையீடுகளை கேட்பவையாக எப்படி இருக்க முடியும்? இதையெல்லாம் மக்கள் சிந்திக்க மறந்து போயினர்.

இன்றும்கூட இந்த அறிவியல் பிரளயத்தில் அத்தகைய மக்கள் இருப்பதைக் காணலாம். ஒருவரைப் பார்த்து மக்கள், “துன்பங்களை களைபவர்!” என்று கூறுகிறார்கள். ஆனால், அவரிடமோ துன்பங்களை நீக்குவதற்கான எத்தகைய ஆற்றலும் இல்லை.

ஒருவரை, “அருள்பாலிப்பவர்!” என்றும் கூறுகிறார்கள். ஆனால், அவரிடமோ யாருக்கும் எதனையும் அருளும் அளவிற்கு எதுவுமில்லை.

ஒருவரை “வரையாது வழங்குபவர்!” என்கிறார்கள். ஆனால், வாரி வழங்கும் அளவுக்கு எப்பொருளுக்கும் அவர் சொந்தக்காரர் இல்லை. 


அதேபோல, ஒருவரை “ஏழையின்  இரட்சகர்!” என்றும் அழைக்கிறார்கள். ஆனால், கோரிய மாத்திரத்தில் ஓர் ஏழைக்கு இல்லையென்று கூறாது வழங்குவதற்கு உரிய அதிகாரம் எதுவுமே அவரிடம் இல்லை.

ஒருவரை ‘கவ்ஸ் – குறையைக் களைபவர்’ என்கிறார்கள். ஆனால், குறையை களைய ஆஜராவதற்கு அவரிடம் எந்த ஆற்றலும் இல்லை.

ஆனால், “ரப்பே அக்பர்! – மாபெரும் அதிபதி!” – என்று விளிக்கப்படும் சர்வ வல்லமையுள்ள இறைவன்.. அந்த பரம்பொருள்.. மனிதர்கள் செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட போலிக் கடவுளர்களின் இறைத்தன்மை மற்றும் தெய்வாம்சங்களுக்கு ஆதரவாக எந்தச் சான்றினையும் வழங்கிடவில்லை.

“நான் இன்னாருக்கு என்னுடைய இறையம்சத்திலிருந்து இவ்வளவு பங்கை திருப்பிவிட்டிருக்கின்றேன்!” – என்று அவன் என்றைக்கும் சொன்னதில்லை. துன்பம் களைபவர், வரையறாது வழங்குபவர் என்று யாருக்கும் எந்தச் சான்றிதழும் வழங்கவில்லை.

மனிதர்கள் தாங்களாகவே அவரவர் ஊகத்திற்கு ஏற்ப இறைவனின் இறைத்தன்மையில், யாருக்கு எத்தனைப் பங்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அப்படியே கொடுத்தும் விட்டார்கள். இந்தப் போக்கு அன்று மக்காவாசிகளிடம் வேரூன்றியிருந்தது.

அதனால், கற்பனை தெய்வங்கள் முன் அவர்கள் செய்த முயற்சிகள் அத்தனையும் வீணாகிப் போனது. சதா நோய்களும், மரணங்களுமாய் ஆகிப் போன மக்காவில் தமது குழந்தை வளர்வது ஆபத்தானது என்று ஆமினா எண்ணினார். குழந்தையை ஹலீமாவிடமே கொடுத்து இன்னும் சிறிது காலம் வளர்த்து வரும்படி பணித்தார். 


பனீஸஅத் கோத்திரத்தார் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்கள். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தோரில் பலர் கவிஞர்களாகவும், சிறந்த சொல்லாட்சி மிக்கவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

“பனீஸஅத் கோத்திரத்தாரின் தோட்டங்களில், வேளாண்மை நிலங்களில் புலமையும், அறிவும் காய்த்துச் செழிக்கிறது போலும்!” – என்று பிற அரபு கோத்திரங்கள் வியந்து சொல்லுமளவுக்கு அவர்கள் அறிவாளிகளாக இருந்தார்கள்.

சிறார் முஹம்மதுவின் (ஸல்) இனிய சொற்களையும், அறிவார்த்தமான பேச்சுக்களையும் கேட்டோர் வியந்து நின்றனர். “இளமையிலேயே இவ்வளவு அறிவும், விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை, வளர்ந்தபின் அறிவின் சிகரங்களையல்லவா தொட்டு நிற்கும்!” – என்று புருவங்களை உயர்த்தினார்கள்.

சிறியவர் முஹம்மது (ஸல்) ஆட்டுப்பாலை அருந்தும்போது, தமது பால்குடி சகோதரருக்கு சமபங்கை தருபவராக இருந்தார். அவரது நீதமான உயரிய பண்புகளைக் கண்டு வளர்ப்பு பெற்றோர் வியப்படைவார்கள். “நிச்சயமாக இவர் வளர்ந்து பெரியவரானதும் இந்த உலகத்தையே நீதி, நேர்மை, நன்மைகளின் பக்கம் கண்டிப்பாக கொண்டு வந்துவிடுவார்!” – என்று தமக்குள் பேசிக் கொள்வார்கள்.

சில ஆண்டுகள் ஹலீமாவின் இல்லம் அருளாலும், வளங்களாலும் நிரம்பி வழிந்தது. இத்தகைய பேறு பெற்ற பிள்ளையை இழக்க ஹலீமாவின் இல்லத்தார் அறவே தயாராகயில்லை. ஆனாலும், அவர்களின் எண்ணம் பொய்த்துப் போவதாக இருந்தது.

உலகம் முழுவதும் குளுமைப் பொழிய வந்த வான்மதியை தனியொருவர் உரிமைக் கொண்டாட முடியுமா? அல்லது ஒருவர் முற்றத்திற்கே ஒளிப் பொழிய வேண்டும் என்று கட்டுப்படுத்தத்தான் இயலுமா? இறைவனால் உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்டவரை ஒரு குடும்பம் மட்டும் தனியுடமை கொள்வது சரியாகுமா?

அப்போது சிறுவர் முஹம்மதுக்கு (ஸல்) வயது ஐந்து.

ஹலீமா அவரை மீண்டும் ஆமினாவிடம் அழைத்துச் சென்றார். கணத்த நெஞ்சுடன், அடைக்கலப் பொருளை (அமானிதம்) பத்திரமாக சேர்க்க வேண்டுமே!

தமது உயிர் தம்மிடம் சேர்ந்த மகிழ்ச்சி ஆமினாவுக்கு.

  • ஒரு தாயின் முகத்தில் பொங்கும் பூரிப்பு!
  • இன்னொரு தாயின் முகத்திலோ துக்கத்தின் பெரும் தவிப்பு!
  • பேரு பெற்ற இன்பம் ஒரு தாயிடம் என்றால்..
  • அனைத்தையும் இழந்தது போன்ற துன்பம் மறு தாயிடம்!
  • மகிழ்ச்சியால் கண்ணீர்  முத்துக்கள் பிறந்தன ஒரு தாயிடம்!
  • துன்பம் பெரு வெள்ளமாய் பெருக்கெடுத்தது மற்றோர் தாயிடம்!

ஹலீமா தமது இதயத்தையே பறி கொடுத்தது போல, வளர்ப்பு மகன் முஹம்மதுவை (ஸல்) ஆமினாவிடம் ஒப்படைத்து பிரியா விடை பெற்றார்.

- பூக்கும்.



Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 7322686534232880372

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress