அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 35: 'கல்விக்கான பயணிக்கு உலகம் எதற்கு?'

ஒரு உற்பத்தியின் வெற்றித் தோல்விகள் அது பயனாளர்களுக்குத் தரும் நல்ல பயன்பாட்டில் அடங்கியிருக்கின்றது.  இதே போன்றதுதான் ஒரு அமைப்பின் கொள்கை – கோட்பாடுகளும். அது மனித இனத்தாரிடையே பிரதிபலிக்கும் மிக உயரிய வாழ்வியல் பண்புகளில் அடங்கியிருக்கிறது. 

தன்னைப் பின்பற்றுபவரிடையே காலங்களைக் கடந்து .. யுக முடிவுநாள்வரை உயரிய வாழ்வியல் பண்புகளைத் தர வல்ல தத்துவமே இஸ்லாம். அதுவும் மனித வாழ்வின் அத்தனைத் துறைத் தழுவிய வாழ்வியல் தத்துவம் இது. படைத்தவான் தனது படைப்புகளுக்குத் தந்த வழிமுறை என்பது இதன் வெற்றியின் ரகசியமாகும். 



நபிகளார் மூலமாக மனித இனத்துக்கு அருளப்பட்ட இஸ்லாம் என்னும் வாழ்வியல் திட்டம் நபிகளார் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிப் பெற்றது. அன்னாருக்குப் பிறகு அந்தக் கொள்கைக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமூக நிர்மாணம் புரிந்த சிற்பிகள் ‘குலபாயே ராஷிதீன் – நேர்வழிச் சென்ற கலிஃபாக்கள்’ மூலமாக வெற்றிகரமாக்கி காட்டப்பட்டது. 

இஸ்லாம் காலந்தோறும் தன்னைப் பின்பற்றி வருவோரிடையே ஒட்டு  மொத்த நற்சமூக மகசூல் அறுவடையைத் தந்தவண்ணம் உள்ளது. 

இதோ, இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில் ‘கல்விக்கான பயணிக்கு உலகம் எதற்கு?’

தமது மாணவனோடு அமர்ந்து உணவு உண்டபின் அவரது இல்லத்தில் மூன்று நாட்கள் இமாம் ஷாஃபி (இறையருள் பொழிவதாக!) விருந்தினராகத் தங்கினார்கள்.

நான்காவது நாள் இமாம் அவர்கள் விடை பெறுவதற்காகப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

அப்போது, “அய்யா!    ‘ஹர்ரான்’ நகரைச் சுற்றி எனக்குச் சொந்தமான நான்கு கிராமங்கள் உள்ளன. இறைவன் மீது ஆணையாக! அவை நன்கு செழித்து வளரக் கூடிய விளைநிலங்கள் கொண்ட பகுதிகளாகும். 

எனது அன்பளிப்பாக இந்தக் கிராமங்களைத் தாங்கள் பெற்றுக் கொண்டு இங்கேயே தங்கியிருந்து தங்கள் கல்விப் பணியைத் தொடர வேண்டும். இது எனது விருப்பமய்யா, தயவு செய்து தாங்கள் இதற்கு உடன்பட வேண்டும்!”- என்று அந்த மாணவர் மன்றாடினார்.



“நன்கு விளையக்கூடிய கிராமங்களை எனக்குத் தந்துவிட்டு நீ என்ன செய்வதாய் உத்தேசமப்பா?” – இமாம் அவர்கள் வியப்புடன் கேட்டார்கள்.

“அது குறித்து தாங்கள் கவலைப்பட வேண்டாமய்ய.. இதோ என்னிடம் 40 ஆயிரம் தீனார்கள் உள்ளன. இதைக் கொண்டு ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்வேன். நீங்கள் இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை. எனது அன்பளிப்பை அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கேயே தங்கி கல்விப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்!”

தம்மீது மாணவன் வைத்திருந்த அபரீதமான மதிப்பைக் கண்டு இமாம் அவர்கள் பூரித்துப் போனார்கள். அன்பொழுகச் சொன்னார்கள்:

“மகனே, நான் உலகச் செல்வங்களை ஈட்டுவதற்கோ, செல்வச் செழிப்புடன் வாழ்வதற்கோ வீட்டை விட்டு வரவில்லை. 



“இறைவன் உனது கல்வியறிவைச் சூரியனைப் போல பிரகாசமாக்கி வைப்பானாக!” 

– எனது வயதான தாயாரின் இந்த பிரார்த்தனையுடன்தான் நான் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்தேன். 

ஆகவே, கல்விக்கான இந்தப் பயணிக்கு உலகம் எதற்கப்பா?”

அந்த உத்தம மாணவன் அத்தோடு விடுவதாய் இல்லை. பரிதாபமான குரலில், “அய்யா! நான் தங்களின் விருப்பத்துக்கு மாறாகப் பேசுகின்றேன்! என்று என்னைத் தவறாக நினைக்கக் கூடாது! தயவு செய்து தாங்கள் என்னுடைய இந்தச் சிறிய அன்பளிப்புத் தொகையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களது திருத்தொண்டுக்கான இப்பயணத்துச் செலவுகளுக்காக இந்தச் சிறு தொகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!”-என்று கெஞ்சலானார்.

அருமை மாணவனின் அன்பு வேண்டுகோளைத் தட்ட முடியாமல் இமாம் அவர்கள் 40 ஆயிரம் தீனார்களைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.

வழியில் இஸ்லாமியப் பேரறிஞர்களான ‘அஹமத் பின்  ஹம்பல்’, ‘சுப்யான்’, ‘’அவ்ஸாஇ’ (இவர்கள் அனைவர் மீதும் இறையருள் பொழிவதாக!) போன்ற எண்ணற்றப் பெரியோரைச் சந்தித்தார்கள். தம்மிடமிருந்த தீனார்களை அவர்களுக்கு வழங்கியவாறே சென்றார்கள். 

ரம்லா நகரை இமாம் ஷாஃபி அடைந்தபோது அவர்களிடம் மிச்சமிருந்தது எவ்வளவு தெரியுமா? வெறும் 10 தீனார் மட்டும்தான்!

  இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 883474896565063847

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress