பாலை மலர் -9, ''காத்திருந்த கண்கள்! பூத்துப் போகுமோ?''



பிரிவு தரும் துன்பம் அனுபவமே உணர்த்தும். அது ஒரு கொடிய நோய்! அதன் துயரமோ எல்லையற்றது.

ஆமினா பிரிவின் விளிம்பில் நின்றிருந்தார். நெஞ்சமோ நொடிதோறும் கனக்க ஆமினா அப்துல்லாஹ்வை எதிர்பார்த்து காத்திருந்தார். அவர் வரும் நாளைக் குறித்து பேதை அவர் புத்தி பேதலித்துவிட்டதைப் போல, 

"வேகமாக செல்லும் ஒட்டகம் ஊரிலிருந்து திரும்பிவர எத்தனை நாளாகும்?" - என்று கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

"ம்.. அப்துல் முத்தலிப் ஷாமுக்கு சென்றால்.. விரைவில் வந்துவிடுவாராமே!"

சுற்றி வளைத்து அப்துல்லாஹ்வின் வருகையை அறிந்துக் கொள்ள பேதை அவர் படாது பாடு பட்டுக் கொண்டிருந்தார்.

பிரிவு சுடும். மனதை கருக்கிவிடும். 

ஷாமிலிருந்து திரும்பி வந்தோர், "நாங்கள் இந்த மலை அடிவாரத்தில் அப்துல்லாஹ்வைப் பார்த்தோம்!" - என்று கூறினர். 

இன்னும் சிலரோ, "இன்ன சமவெளியில் தங்கியிருந்ததைக் கண்டோம்!" - என்றனர்.



இவற்றைத் தவிர வேறு தகவல் ஏதுமில்லை!

அப்துல்லாஹ் சென்ற திசையை நோக்கி ஆமினாவின் விழிகள் குவிந்திருந்தன. பேரீச்சம் மரங்களின் அசைவுகள் அப்துல்லாஹ் வருகிறார் என்ற பிரமையை ஏற்படுத்தி பலமுறை ஏமாறச் செய்தன. 

எங்கேயோ ஒட்டகம் செல்லும். அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் வெண்கல மணி அசைந்து ஒலி எழுப்பும். உடனே உடல் சிலிர்க்க ஆமினா வாசற்படிக்கு ஓடிவந்து எட்டிப் பார்ப்பார். 

அப்துல்லாஹ் வந்துவிட்டாரோ என்று இறந்த காலங்களின் நிகழ்வுகள் நிகழ்காலத்தின் மன அசைவுகளாக ஆமினாவுக்குத் திகழ நாட்கள் கழிந்தன. மாதங்கள் கடந்தன!

இப்போது அப்துல் முத்தலிப் மகனைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தார். 

ஷாமிலிருந்து வணிகக் கூட்டம் ஒன்று மக்கா வந்த செய்தி கிட்டியது. வணிகர்கள் பயண களைப்பில் சோர்ந்திருந்தனர். ஓய்வுக்குப் பிறகே புதிய செய்திகள் கிடைக்கும் என்ற நிலை.

அடுத்த நாள் காலைவரை காத்திருக்க அப்துல் முத்தலிப் தயாராக இல்லை. 

வணிகக் குழுவினிடம் நேராகச் சென்று மகனைக் குறித்து விசாரிக்கத் தொடங்கினார். 

"அப்துல்லாஹ், ஷாமிலிருந்து திரும்பிவிட்டார். தற்போது யத்ரிபில் தங்கியுள்ளார். அவரது உடல்நிலை சரியில்லை!" - என்ற தகவலைப் பெற்றார். 

சோகம் முகத்தில் படர அப்துல் முத்தலிப் வீடு திரும்பினார். அவரைக் கண்டதும் ஓடி வந்தார் ஆமினா. வந்த வேகத்தில் அப்துல் முத்தலிபின் முகத்தைக் கவனித்தவர் திடுக்கிட்டார். உள்ளம் கலவரடைந்தது. கண்கள் படபடத்தன. கணவனின் நிலையை அறிந்ததும் வானமே தலையில் இடிந்து விழுந்ததைப் போல கலவரமடைந்தார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.



அப்துல்லாஹ்வின் நினைவுகள்  ஆமினா வயிற்றுக்குள் சுமக்கும் கருவினுள் பொதிந்திருந்தன. 

"கருவுற்றவர்கள் அதிர்ச்சியடையக் கூடாது பெண்ணே!" - வயதான சமையற்கார மூதாட்டி, ஆமினாவை ஆதரவுடன் அரவணைத்து அன்பொழுக அறிவுறுத்தினாள். அந்த வேதனையிலும் ஆமினாவின் முகம் நாணத்தால்... இளஞ்சூரியனாய் சிவந்துவிட்டது.

"அவர்... அவருக்கு உடல்நிலை சரியில்லை! அதிலும் அயலூரில் என்ன பாடுபடுகின்றாரோ நான் அறியேன்!" - என்று புலம்பி அழுத ஆமினாவிடம்,

"ஓ! ஆமினா! அப்துல்லாஹ்வுக்கு ஒன்றுமில்லை! அழாதே! நல்ல பலசாலிகள் நோயால் வாடுவதில்லையா? அதன்பின் நலமடைவதில்லையா? இதற்கு ஏன் கலக்கமடைகிறாய்? கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும். 

நம் லாத், உபல் தெய்வங்கள் நமக்குப் பாதுகாப்பாய் இருக்க இனி என்ன கவலை நமக்கு?  எழுந்திரு மகளே! எழுந்து வழக்கமான பணிகளைப் பார்!" - என்று மூதாட்டி ஆமினாவை தேற்றலானாள். 

அப்துல்  முத்தலிப் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மக்காவின் பொதுநல மன்றத்துக்குச் சென்றுவிட்டார். 

சமையற்கார மூதாட்டி, சமையல் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டாள்.

வீட்டுப் பெண்கள் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டனர்.

ஆனால், ஆமினாவின் உள்ளமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது. ஆயிரம் பேர் ஆயிரம் வார்த்தைகள் சொன்னாலும் அவர் நிம்மதியடையவில்லை. அப்துல்லாஹ்வின் நினைவுகளில் ... அவரின் வருகையின் எதிர்ப்பார்ப்பில் அபலை அவர் காத்திருந்தார்.

- இறைவன் நாடினால்.. பூக்கும்.

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 8346659583637332173

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress