அழைப்பது நம் கடமை 26 : 'போரற்ற உலகம் வேண்டும்!'




கைது செய்யப்பட்ட எதிரி நாடடுக் கைதியோடு நல்ல முறையில் நடந்து கொள்ள இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகளார் இது சம்பந்தமாக அதிகளவு அறிவுறுத்தியிருக்கிறார்கள். சுதந்திரமாக படைக்கப்பட்ட மனிதனின் உரிமையைப் பறித்து சிறையிலிடுவதையோ, துன்புறுத்துவதையோ நபிகளார் அனுமதித்ததில்லை.

எதிரியின் வீரர்கள் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக சிறைபிடிக்கப்படுவதும் இந்த அடிப்படையில்தான்.

"எனவே, உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால்.. அவர் எந்தளவுக்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்த அளவுக்கு நீங்களும் அவருக்கு பதிலடி கொடுங்கள். ஆயினும், இறைவனுக்கு அஞ்சி வாழுங்கள். வரம்புகளை முறிப்பதிலிருந்து விலகி இருப்பவர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்!" (2:194) என்கிறது திருக்குர்ஆன்.

நபிகளார் கைதிகளின் உரிமைகள் சம்பந்தமாக திரும்ப .. திரும்ப வலியுறுத்துகிறார்கள்: "பாதிக்கப்பட்டோரின் முறையீடுகளிலிருந்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். ஏனென்றால்.. அவர்களுக்கும், இறைவனுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் இல்லை!"

நபிகளாரின் இந்த அறிவுரையை நபித்தோழர்களும் மிகக் கண்டிப்புடன் அமல்படுத்தினார்கள். பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட எதிரி வீரரான 'ஹீஸைர் இப்னு உமைர்' சொல்கிறார்:

"அவர்கள் (முஸ்லிம்கள்) உணவு நேரங்களில் எனக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். ரொட்டிகளை எனக்குக் கொடுத்துவிட்டு வெறும் பேரீத்தம் பழங்களைத்தான் அவர்கள் உணவாக உண்பார்கள். இது கைதிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்ற நபிகளாரின் ஆணையின் அடிப்படையில் பின்பற்றப்பட்டுவந்தது"

நபிகளாரின் மரணத்துக்கு பின் மக்கள் தலைவராக இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதியாக பதவி ஏற்ற நபித்தோழர் அபூபக்கர் (இறையருள் பொழிவதாக!) சிரியாவின் மீது போர் தொடுக்கச் செல்லும்போது, படைத்தளபதியிடம் சொன்ன அறிவுரைகள் இவை:

  • நம்பிக்கைத துரோகம் செய்யாதீர்கள்!
  • யாரையும் பழிவாங்காதீர்கள்!
  • யாரையும் முடமாக்காதீர்கள்!
  • குழந்தைகளையோ, பெண்களையோ, முதியவர்களையோ கொல்லாதீர்கள்!
  • தோட்டந்துறவுகளையோ, மரஞ்செடிகளையோ அழிக்காதீர்கள்!
  • மடங்களில் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் துறவிகளை.. அவர்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தாலும் கொல்லாதீர்கள்!

- இத்தகைய உயரிய அறிவுரைகளை திருக்குர்ஆன் ஒளியில் அன்றைய 'சூப்பர் பவர்' இஸ்லாமிய பேரரசின் படைத்தளபதிக்கு வழங்கப்பட்டது என்பது முக்கியமானது. 'முஸ்லிம்கள் நீதியில் நிலைத்திருக்கும்படியும், அது அவர்கள் பெற்றோருக்கு, உற்றார் உறவினருக்கு எதிராக இருந்தாலும் சரியே!" - என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும், அல்லாஹ்வுக்கு சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! (நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும்) உங்களுக்கோ, பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கள் யாருக்காகச் சாட்சி சொல்கிறீர்களோ) அவர் செல்வந்தராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் சரியே! இறைவன் அவர்களின் நலனில் உங்களைவிட அதிக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான். எனவே, மன இச்சையைப் பின்பற்றி நீதி தவறிவிடாதீர்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ, சாட்சியளிக்காமல் விலகி சென்றாலோ திண்ணமாக இறைவன் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்!" - என்கிறது (4:135) திருக்குர்ஆன்.

மற்றொரு இடத்தில் இறைவன் கூறுகின்றான்: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைவனுக்காக வாய்மையில் நிலைத் திருப்போராயும், நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. இறைவனுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள். நீங்கள் செய்பவற்றை முழுமையாக இறைவன் அறிந்தவனாக இருக்கின்றான்!" ( 5:8)



சிலுவைப் போர்களின் போது, முஸ்லிம் படைத்தளபதி 'சலாஹீத்தீன் யூசுஃப் இப்னு அய்யூப் (சலாவுத்தீன் 1137-1193) இங்கிலாந்தின் இதயப் பகுதிவரை போரில் முன்னேறி விட்டார். தமது எதிரியான 'ரிச்சர்ட்' அந்த நேரத்தில் கடும் நோய்க்கு ஆளானார். ரிச்சர்ட்டுக்கு மருத்துவம் பார்க்க ராஜாங்க சிறப்பு மருத்துவரை அவர் பூரணமாக குணம் அடையும்வரை பக்கத்திலேயே தங்கி இருந்து மருத்துவம் பார்க்க அனுப்பி வைததார் சலாஹீத்தீன்.

இந்த அருங்குணம், ஒப்பற்ற பண்பு, அமெரிக்க - இங்கிலாந்து ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களுக்கு புத்தம் புதியது.

ஜெருசலேத்தில் ஜுலை 15, 1099 இல், கிருத்துவப்படை நுழைந்தபோது, 70 ஆயிரம் முஸ்லிம்கள் ஆடு_மாடுகளைப் போல கொடூரமான முறையில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். மனித இனம் வெட்கித் தலைகுனியும் நிகழ்ச்சி அது.



பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் யாரும் இந்தக் காட்டுமிராண்டித் தனத்திலிருந்துத் தப்பில்லை. குழந்தைகளின் தலைகளை சுவர்களில் மோதி சிதறு தேங்காய்ப் போல சிதறடித்தார்கள். பச்சிளம் சிசுக்களை உயரமான கட்டிடங்களிலிருந்து கீழே வீசி எறிந்தார்கள்.

முஸ்லிம்களை உயிருடன் தீயிட்டுப் பொசுக்கினார்கள். தங்கத்தை விழுங்கி இருக்கலாம் என்ற சாக்கில் உயிருடன் பெண்களின் வயிற்றைக் கிழித்தார்கள். இன்னும் அவர்கள் செய்த கொடுமைகளை புகழ்பெற்ற கிருத்துவ வரலாற்று அறிஞர் 'எட்வர்ட் கிப்ஸன்' தமது வரலாற்று நூலான 'ஹிஸ்ட்ரி ஆஃப் தி இன்டலெக்சுவல் டெவலெப்மெண்ட் ஆஃப் ஈரோப்' (HISTORY OF THE INTELLECTUAL DEVELOPMENT OF EUROPE - Vol.2, Page 77)  என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.



இந்த போக்கிலிருந்து இவர்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கு குவாண்டனாமோ சிறைக் கொடுமைகள் சாட்சி! மேலும் விவரத்துக்கு காண்க: http://mrpamaran.blogspot.in/2013/01/blog-post_19.html



இஸ்லாத்தின் போர்கள் மக்களுக்கு எதிரான போர்கள் அல்ல. சித்தாந்த ரீதியான யுத்தங்கள் அவை. இஸ்லாத்தின் பார்வையில் போர் என்பது உலக நாடுகளை அடிமையாக்குதல் அல்ல. தனது மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்ள அடுத்த நாட்டு மக்களைக் கொள்ளையடிப்பதும், அடுத்த நாட்டு வளங்களைச் சுரண்டுவதும் அல்ல. 

இஸ்லாத்தின் பார்வையில் போர் என்பது நீதியையும், நியாயத்தையும் நிலைநிறுத்துவதாகும் அதாவது தர்மத்துக்கான அறவழிப்போராகும் அது. அதனால், முஸ்லிம்களின் நடத்தை இதற்கு முன்பும், தற்போதும் அல்லது போருக்குப் பிறகும், போரின் போதும் எப்போதும ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சக மனிதனின் உரிமையைப் பறிக்கவே கூடாது. வாழும் உரிமையை வாள்முனையாலோ துப்பாக்கி நிழலாலோ பறிக்கவே கூடாது. எக்காரணம் கொண்டும் வரம்புகளை மீறவே கூடாது. 

ஆள் கடத்தல், பணயக் கைதிகளை சிறைப் பிடித்தல், அப்பாவிகளைத் துடிக்கத் துடிக்கக் கொலைச் செய்தல் இந்தக் காட்டுமிராண்டித்தனங்களுக்கும் இஸ்லாத்துக்கும் அறவே சம்பந்தம் இல்லை. 

இஸ்லாம் உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட வாழ்வியல் திட்டம். நபிகளார் உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட மானுட வசந்தம்; மானுட இனத்தின் முன் மாதிரி. பூவை விட மெல்லிய இதயம் கொண்டவர். பூ உலகில் சாந்தியை.. சமாதானத்தை நிலைநாட்ட வந்த பூங்காற்று. அதி மெல்லிய அந்த வசந்தம் உலகில் தவழ சூறைக் காற்றுகளை எல்லாம் தம் மீது தாங்கிக் கொண்ட தியாகச் சுடர் அண்ணல் நபி.

இஸ்லாம் அமைதிக்கான வசந்தம். போரில்லாத மனித குலத்தை அமைப்பதே அதன் லட்சியம். இந்த விஷயங்களில் அழைப்பாளர்கள் தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். காட்டுமிராண்டித்தனங்களுக்கு ஒரு காலும துணை நிற்கவே கூடாது. 

 - அழைப்பியல் தொடர் முற்றுப் பெற்றது.

(இந்த அழைப்பியல் தொடர் சென்னையிலிருந்து வெளியாகும் 'மனாருல் ஹீதா' மாத இதழில் 2003 மற்றும் 2004 ஆண்டுகளில் வெளிவந்தது)

Related

அழைப்பியல் 5987083354693146952

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress