பாலை மலர்- 11, 'கனவுகள் கலையட்டுமே'




கஅபாவுக்கு ச்றுத் தள்ளி சில கடைகள் இருந்தன. வீட்டக்குத் தேவையான மளிகைப் பொருட்களான மாவு, அரிசி, உப்பு, ஆலிவ் எண்ணெய் இவற்றுடன் வாசனைப் பொருட்களும் விற்கப்பட்டன. அதேபோல காய்கறிகடைகளும், தையற்கடைகளும் இருந்தன. 

ஓய்வு நேரங்களில் கடைக்காரர்கள் ஒன்று கூடி ஊர் விஷயங்களைப் பேசி வம்படிப்பார்கள். அன்றும் அப்படிதான்!

"கேட்டாயா? அப்துல் முத்தலிப் தம் பேரனுக்கு இரண்டு பெயர்கள் வைத்திருக்கிறாராமே!"
"ஆமாம்.. ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன். அஹ்மது, முஹ்மது என்று பெயர் சூட்டியுள்ளராம்!"

"பொருத்தமான பெயர்கள்தான்! குறைஷிகள் எதைச் செய்தாலும் அதில் ஏதாவது ஒரு மறைபொருள் இருக்கத்தான் செய்யும்"

"அத்னானின் செல்வாக்கு! முர்ராவின் வரலாறு! கிலாப்பின் நீண்ட ஆயுள்! லோயியின் சம்பவம் மற்றும் கஸியின் பெரும் புகழ்! என்று இதற்கு பல உதாரணங்கள் உண்டல்லவா?"

"ஆமாம்! பெயர்களுடன் ஒட்டிய பண்புசார் வரலாற்று நாயகர்களாயிற்றே அவர்கள்!"

"பனு பக்கர், பனு தாலிப் இவையும் இப்படிப்பட்ட காரணப் பெயர்கள்தான்! இதே போன்றதுதான் பனு கஸீமா கோத்திரமும்!"

"சரியாக சொன்னீர்! ஒட்டக மேய்ச்சல் சம்பந்தமாக பனு பக்கர், பனு தாலிப் கோத்திரங்களிடையே எழுந்த பிரச்சினை நன்றாக நினைவுக்கு வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிர் சேதமுமல்லவா ஏற்பட்டது!"


"இப்போது எனக்கும் அந்தச் சமப்வம் நினைவில் எழுகிறது. நீங்கள் குறிப்பிட்ட போரின் விளைவாக பனு கஸீமா கோத்திரத்தாரின் வீரமும் நீதியமல்லவா வெளிப்பட்டது"

"ஆஹா.. வீரம் என்றால் அதைத்தான் வீரம் என்று குறிப்பிட வேண்டும்! குளம்புகளில் தீப்பொறி பறக்க பாய்ந்த உமைய்யாவின் குதிரையைப் போன்ற குதிரையை நான் இதுவரையிலும் கண்டதில்லை. அபுசுப்யானினி; மின்னல்வெட்டும் வாளை நான் கண்டதேயில்லை.. கேட்டதுமில்லை!"

"சச்சா.. அப்துல்லாஹ்வின் மகனைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு சம்பந்தமில்லாமல் திசை திரும்பிவிட்டதே!"

வம்பளந்து கொண்டிருந்தவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். சற்று நேரம் கழித்து ஒரு பெரியவர் தொடர்ந்தார்: 

"என்னால்.. உறுதியாக சொல்ல முடியும். குறைஷிகளில் இதுவரை யாரும் முஹம்மத், அஹ்மத் என்று பெயர் வைத்ததில்லை. இது புதிதாக இருந்தாலும் அழகான பெயர். பெயரை உச்சரிக்கும் போதே மனதில் நம்மையும் அறியாமல் ஏதோ ஈர்க்கிறதே!"

"தோழர்களே! அப்துல்லாஹ்வின் மகனை என் சித்தி பார்த்துவிட்டு வந்தாள். வந்ததும் வராததுமாய் ஆஹா என்ன அழகு! என்ன அழகு!! இப்படிப்பட்ட குழந்தையை என் வாழ்நாளில் நான் பார்த்ததேயில்லை. கருணைச் சொரியும் கண்கள், பிரகாசமாய் ஒளிரும் முகம், செக்கச் சிவந்த நிறம், இதயங்களை ஈர்த்துவிடும் பொக்கை வாய் சிரிப்பு! இப்படிப்பட்ட குழந்தையை இதுவரை நான் கண்டதில்லை! என்று பொழுதெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள்"

நான் ஒரு கனவு கண்டேன்! அதைக் கேட்காமலிருந்தாலே நல்லதுதான்! நான் சொல்லி நீங்கள் கேட்டு வருத்தப்பட்டு  பிறகு என் மீது வருத்தப்படக்கூடாதே அதுதான்! – என்றார் இன்னொரு அரபி.

சுற்றியிருந்தவர்கள், "நீ சொல்ல வந்ததை சொல்லாவிட்டால்தான் எங்களுக்கு வருத்தம் ஏற்படும். அதனால், எதையும் மறைக்காமல் சொல்லிவிடு தாமதிக்காமல்!" – என்று அவசரப்படுத்தினார்கள் ஒரே குரலில். 

"சரி.. சரி.. சொல்கிறேன் கேளுங்கள். நேற்று ஒரு கனவு கண்டேன். நான் மது அருந்த விரும்பி குவளையை வாயருகே கொண்டு செல்கின்றேன். ஆனால், யாரோ என் கையிலிருந்த குவளையைத் தட்டி விடுகின்றார். நான் நம் தெய்வங்களை வணங்க மண்டியிடுகின்றேன். ஆனால், யாரோ என்னைப் பிடித்து சிரம் பணியவிடாமல் தடுக்கின்றார். இனி சிலைகளை வணங்கக்கூடாது! என்று சொல்வதையும் கேட்டேன்!"-என்றார்.

அதைக் கேட்ட வயதான அரபி ஒருவர், "குருதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பல போர்களில் பங்கு கொண்டு எத்தனையோ வீர – தீர சாகஸங்களைச் செய்தவன் நான். போர்க்களக் காட்சிகள் என்னை பாதித்ததேயில்லை. ஆனால்... ஆனால்.." – என்று முகத்தில் அரும்பிய வியர்வைத்துளிகளைத் துடைத்து விட்டவாறு கலவரக்குரலில் தொடர்ந்தார்: "ஆனால், இப்போது நீ சொல்வதைக் கேட்டதும் அச்சத்தால் என் உள்ளம் நடுநடுங்குகின்றது. ஓ..! லாத்தே..! எனக்கு மன உறுதியைத் தா! ஓ! மனாத் நடப்பதை கவனித்தாயா?" – முதியவர் புலம்ப ஆரம்பித்துவிட்டார். 

இப்படியாக வேடிக்கை, விளையாட்டு, பயம் கலந்த வம்பு பேச்சுக்கள் நடந்தன.

- பூக்கும் 

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 7101019819745064543

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress