இறைவன் அழைக்கின்றான்: 'நிம்மதி உங்கள் சாய்ஸ்'



ஒளி!

ஒளி நிஜமானது. அது இயல்பானது. இயற்கையாக இருப்பது. அது தடுக்கப்பட்டால்.. அந்காரம் அவதரிக்கும். மனிதனுள்ளும், சமூகத்துள்ளும் அந்த காரிருளை விரட்டுவதற்கு ஒளியைச் சுற்றியிருக்கும் திரையை.. தடுப்பை நீக்கிவிட்டால்.. போதும்.. இருள் அகன்று.. ஒளி பிறக்கும்!

மனிதன் இயல்பிலேயே சமூக ஜீவி. நல்லதை விரும்புபவன். தீயதை வெறுப்பவன். அவனுடைய நல்லியல்புகளை போதனைகள்.. பயிற்சிகள்.. சூழல்கள் போஷித்து வளர்க்கின்றன. இல்லாவிட்டால்.. அவை துருப்பிடித்த இரும்பாய் பயனற்றுப் போகும். சில நேரங்களில் அவனை தீமைகளின் பக்கம் இழுத்துச் சென்றுவிடும். 

நல்லவை செழித்து வளரும்போது, மனித வாழ்க்கை நன்மைகளால் பூத்துக் குலுங்கும். சமூகம் முழுக்க அமைதி தவழும். நன்மைகள் நசுக்கப்படும் போது, மேலெழுவது.. வளர்வது.. செழிப்பது தீமைகளே! அதன் விளைவாக உருவாவது நாற்றமெடுக்கும் வாழ்க்கை அமைப்பு. அமைதியை பறிகொடுத்த சமூகம். நிம்மதியைத் தொலைத்துவிட்ட மனங்கள், ஒழுக்கச் சூழல்கள் மாசுபடும்போது தனிநபர் வாழ்விலும், சமூகக் கூட்டு வாழ்விலும் காணக் கிடைப்பது.. செல்வாக்குப் பெறுவது.. கோலோச்சி நிற்பது.. தீமைகளே!

இப்படி தீமைகள் என்னும் காரிருள் நாற்புறமும் சுற்றிச் சூழும் போது, அவை கனத்த போர்வையாய்ப் படர்ந்து இருக்கும் போது..

நன்மைகள் என்னும் ஒளிக்கீற்று கூரான வாளாகி இருட்திரையைக் கிழித்துப் பேரொளிப் பிழம்பைப் பரவச் செய்யும்,

ஒவ்வொரு பொழுதின் உதயமும் இதைத்தான் நமக்கு அறிவிக்கிறது. 

மனித வாழ்க்கையில் ஆன்மாவை ஒளிரச் செய்யும் பண்புகள் குறைந்துவிட்டன. மனதைத் தூய்மைப்படுத்தும் சிந்தனைகள் விலகிவிட்டன. அமைதியை உருவாக்கும் வாய்ப்புகள் அருகிவிட்டன. மனங்களுக்கு நிம்மதி அளிக்கும்.. அறியாமை இருளை விலக்கும் .. அறிவொளி தீபத்தை ஏற்றும், வாழ்க்கையை நேர்வழியில் செலுத்தும் வழிமுறைகளே இன்றைய அவசர.. அவசியத் தேவைகள்!

கருணைக் கடலான இறைவன் அந்த முக்கியத் தேவைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திக்கின்றான்; தனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) நபிகளார் மூலம் அருளியிருக்கின்றான்; வான்மறை திருக்குர்ஆன் வடிவில்!

குழப்பமடைந்த இருதயங்களுக்கு அமைதியை.. திருப்தியை.. உண்டாக்கும் வரப்பிரசாதத்தை அதில் குறிப்பிட்டிருக்கின்றான் இதோ!

"அறிந்து கொள்ளுங்கள்! இறைவனை நினைவு கூர்வதில்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன" (13:28)

ஆம்..! 

இறைவனைப் போற்றி.. புகழ்ந்து அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தால்தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கிறது.

(01.08.2001 - ஒற்றுமை இதழில் வெளிவந்தது)

Related

இறைவன் அழைக்கின்றான் 6312834470543435677

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress