அண்ணல் நபியின் கன்னல் மொழி: "எது இனவாதம்?"



மனிதர்களின் நேசம் வகை வகையானது.

மண், பொன், பொருள், பெண் இவற்றுடன் மொழி, நாடு. இனம், குடும்பம் என்று நீளுவது.

அன்பு நபியின் திருச்சபையில் அன்றைய சிற்றுரையின் தலைப்பு 'சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?' – என்பதாகும்.

"உங்களில் சிறந்தவர் யார் தெரியுமா?" – நபித்தோழர் புடைசூழ இருந்த அந்த சபையில் நபிகளார் எழுப்பிய கேள்வி இது. கேட்போரை தன்னுரையில் ஈர்ப்பதற்கு அன்பு நபி கையாளும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று அதாவது தோழர்களிடம் கேள்வி கேட்பது.. அந்த கருத்துரையில் அவர்களையும் ஈடுபடுத்துவது.

ஒவ்வொரு நபித்தோழரும் தன்னை நோக்கித்தான்  நபிகளார் கேள்வி எழுப்பினார்கள் என்று பதில் சொல்ல காத்திருக்க நபி பெருமானாரோ அதற்கான பதிலை தொடர்ந்து சொல்கிறார்கள்:

"உங்களில் சிறந்தவர் யார் எனில்.. உங்கள் இனத்தாரை பாவங்கள் மற்றும் அசத்தியத்தின் பக்கம் செல்ல விடாமல் தடுத்து அவருக்கு உதவி செய்பவராவார்!"


ஆக, மனிதர்களில் சிறந்தவர்,

  • இனத்தை நேசிப்பவர்
  • இனத்தை நேசிப்பதன் வெளிப்பாடாக.... தனது நேசத்துக்குரியவர் பாவங்கள் செய்யவிடாமல் தடுப்பவர். அந்த மக்கள் அநீதியின் பக்கம்.. அசத்தியத்தின் பக்கம் செல்லவிடாமல் தடுப்பவர்.
  • பாவச் செயல்களை தடுப்பதன் மூலம் நன்மை – தீமை பிரித்தறிவித்து சமூக மக்களை வழி நடத்துவதன் மூலமும் தனது நேசத்துக்குரிய சமூகத்துக்கு உதவியாளராக நிற்பவர்.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அற்புதமான பாணி இது:

மனிதன் எப்போதும் வாய்மையில் நிலைத்திருக்க வேண்டும். சத்தியத்திற்கு சான்று பகருபவராக திகழ வேண்டும்.

மாறாக, அவனது இனத்தார் மீதான நேசம் இனமாச்சரியமாக மாறி சக மனிதனுக்கு அநீதி இழைத்துவிடக் கூடாது.

தனது சமூகமோ.. தனது சமூகம் சார்ந்தநாடோ தவறுகள் இழைக்கும் போது அதை தட்டிக் கேட்க தயங்கக்கூடாது.

மற்றுமோர் சிற்றுரையில், நச்சென்று இனவாதத்துக்கான வரையரையை முறைப்படுத்தி தருகிறார்கள் நபி பெருமானார்.



இத்தருணத்தில் கேள்வி அன்பு நபியின் திருச்சபையிலிருந்து வருகிறது இப்படி:

"ஒருவர் தனது சமுதாயத்தை நேசிப்பது இனவாதம் ஆகுமா?"

"இல்லை!" – என்பதுதான் நபிகளாரின் பதிலாக இருந்தது. இன்னும் கொஞ்கம் விளக்கம் தரும் வகையில் தொடர்ந்து கூறுகிறார்கள்: தனது சமூகம் புரியும் கொடுமைகளுக்கு துணை போவதுதான் இனவாதமாகும்!
  • இனத்தை நேசிப்பது இனவாதமல்ல..
  • அதேசமயம், தான் சார்ந்த இனத்தாரின் கொடும் செயல்களுக்கு துணை போவதுதான் இனவாதமாகும்.
குடும்பமானாலும், ஊராக இருந்தாலும், நாடாக மாறினாலும் தனது இனத்தார் செய்யும் அத்தனை செயல்களுக்கும் துணை போவது மட்டுமே இனவாதமாகும்.

குடும்பத்தையோ, உறவு முறைகளையோ விட்டுக் கொடுக்காமல் அவர்கள் செய்யும் அத்தனை கொடுமைகளுக்கும், தீமைகளுக்கும், உரிமை மீறல்களுக்கும் துணை போவது இனவாதமாகும்.

இனவாத்தின் அளவுகோல் இதுதான். ஆம்..! அன்பு நபியின் வரையரை இதுதான்:
  • ஒருவர் தனது குடும்பத்தையோ, இனத்தையோ, சமூகத்தையோ நேசிப்பது இனவாதமல்ல.
  • இவர்களின் நன்மையான செயல்களுக்கு துணை போவதும் இனவாதமாகாது.
தனது சமூகம் அடுத்தவர் மீது புரியும் கொடுமைகளுக்கு துணை போவதுதான் இனவாதமாகும்.

ஆதாரம்: மிஷ்காத்

அறிவிப்பாளர்கள்: சுரகா இப்னு மாலிக் மற்றும் உபாதா இப்னு நசீர் (இவர்கள் மீது இறையருள் பொழிவதாக!)

Related

அண்ணல் நபியின் கன்னல் மொழி 5466695274884683005

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress