ஆன்மிகச் சிந்தனை: 'இருளில் வந்த வெளிச்சம்'


நள்ளிரவு.

உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட மதீனா நகரம்.

சல சலக்கும் பாலைவன பேரீத்த மர ஓலைகளின் ஓசையைத் தவிர எங்கும் நிலவிய நிசப்தம்.

நெடிதுயர்ந்த உருவம் ஒன்று ஒவ்வொரு தெருவாய் நடந்து கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் ஆளரவமற்ற பாலைவனத்திடலில் 'மினுக்.. மினுக்..' வெளிச்சம் தெரிய அதை நோக்கி நடக்கிறது. 

அங்கே ஒருவர் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார். விசாரித்ததில் அவர் ஒரு வழிப்போக்கர் என்றும், அவரது மனைவி கூடாரத்தில் பிரசவ வேதனையில் துடிப்பதும் தெரிந்தது. புது இடம். பணமுடை. அகால வேளை. எல்லாம் சேர்ந்து அவரை வருத்திக் கொண்டிருந்தது.

இதைக் கேள்விப்பட்டதும் தன் வீட்டுக்கு விரைந்தது அந்த உருவம். மனைவியை உடன் கிளம்பும்படியும் பணித்தது.

"நீங்கள் இன்னும் இரவு உணவு உண்ணவில்லையே!" - என்கிறார் அந்த இல்லத்தரசி. 

"ஆம்...! ஆனால், அந்த உணவு இன்னொருவருக்குத் தேவைப்படுகிறது!"

"கொஞ்சம் பாலாவது சாப்பிடலாமே!"

"வேண்டாம்..! பிரசவ வேதனையிலிருக்கும் அப்பெண்மணிக்கு அது தேவைப்படலாம். அவற்றை எடுத்துக் கொண்டு சீக்கிரம் கிளம்பு போகலாம்!" - என்று அவசரப்படுத்துகிறது அந்த உருவம்.

சற்று நேரத்தில் கணவன், மனைவி இருவரும் பாலைவனத்தின் கூடாரத்தை அடைகிறார்கள். 

மனைவியை கூடாரத்தினுள் பிரசவம் பார்க்க அனுப்பிவிட்டு அந்த உருவம் வழிப்போக்கரிடம் பேச்சுக் கொடுக்கிறது.

பேசிக் கொண்டிருக்கும் போதே கூடாரத்திலிருந்து, "ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது! தாயும், சேயும் நலம்! வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்!" - என்று குரல் வருகிறது.

'ஜனாதிபதி' என்ற சொல், அந்த வழிப்போக்கரை நிலைகுலைய வைக்கிறது. 

நடுங்கிக் கொண்டே அவர், "இந்த நாட்டின் தலைவரா.. ஜனாதிபதியா.. தாங்கள்?" ஆச்சரியத்தாலும், பதட்டத்தாலும் பேச்சுவராமல் திணறுகிறார்.

"இதில் வியப்படைய என்ன இருக்கிறது சகோதரரே! நீங்கள் பதட்டமடைய தேவையில்லை. ஒரு நாட்டின் தலைவன் என்பவன் உண்மையில் மக்களின் ஊழியன் ஆவான்!" - என்கிறார்கள் மாறுவேடத்தில் இருந்த ஜனாதிபதி உமர் (பொங்கட்டும் இறையருள்!) அவர்கள். 

-தினமணி, 07.04.1995 அன்று 'ஆன்மிகச் சிந்தனைப்' பகுதியில் பிரசுரமானது.

Related

ஆன்மிகச் சிந்தனை 4152398885134177901

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress